Tuesday, January 30, 2018

கண்ணோட்டம்

இரும்பு இருக்கு.. உங்களாலே சாதாரணமா அழிக்க முடியுமா.. முடியாது.. ஆனாத் துருப் பிடிச்சா.. ? அது அழிஞ்சு போகுது.. இரும்போட கூடப் பொறந்த துருவே இரும்பை அழிச்சுடுதே.. அந்த மாதிரிதான் நம்மளோட தேவையில்லாத எண்ணங்கள், குழப்பங்கள், அசிங்கமான உணர்ச்சிகள், போட்டி பொறாமை வில்லத்தனம்தான் நம்மையே அழிக்குது.. நாறும் சாக்கடைகளை ஒதுக்கித் தள்ளுங்க...
வாழ்க்கையிலே மேடு பள்ளம், உயர்வு தாழ்வு இருந்தா அதுக்காகக் கவலைப் படாதீங்க.. வருத்திக்காதீங்க.. மேலும் மேலும் தொய்வு வராம வாழ்க்கைப் பயணத்துலே நடந்து போங்க.. ஈசீஜி வரைபடம் நம்ம இதயம் ஹார்ட்டு வேலை செய்யுதாங்குறதைச் சொல்லுதுங்க.. அந்த வரைபடம் பாத்தீங்கன்னா மேலேயும் கீழேயும் ஓடுதுங்களே.. பயப்படாதீங்க .. ஆனா அதுவே ஒரே நேர் கொட்டுலே போனா .. ஐயோ.. வேண்டாம்.. உயிர் போனதா அர்த்தம்.. !!!!!!..
கொதிக்கிற வெந்நீர் முட்டையை கட்டியாக் கெட்டியா மாத்துது இல்லியா .. ருசியுடன் சாப்பிடுறோம்.. ஆனா உருளைக்கிழங்கை வெந்நீரே மிருதுவாப் பண்ணி நம்ம சாப்பிடறதுக்கு ஏதுவாச் செய்து கொடுக்குதுங்களே.. வேண்டாமுன்னா சொல்றோம்...
ஏற்றத்தாழ்வுகளும் வாழ்க்கைக்கு எதிரிகள் அல்ல.. உபயோகமான அனுபவங்களேதான்.. செம்மையாக உறுதியாக எதிர் நோக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சியம்தான்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Wednesday, January 24, 2018

சுமங்கலிப் பிரார்த்தனை செய்யப்படும் முறைகள்

சாதாரணமாக, புதுப்புடவையை நனைத்து, காய வைத்து, கொசுவம் வைத்து, மணையில் அலங்கரித்து, அதை அம்பிகையாக வைத்துப் பூஜிப்பது ஒரு முறை. ஒரு பானையில், சித்தாடை எனப்படும், பாவாடை சட்டையை வைத்து (பூவாடை பானை) வழிபடுவது ஒரு முறை. வீட்டில் கன்னிப் பெண் இறைவனடி சேர்ந்திருக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்வது பெரும்பாலான குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. கல்யாண மண்டபங்களில், பெண்களை உபசரித்து உணவளிப்பது ஒரு வகை. இது 'அதிசயப். பெண்டுகள்' என்று கூறப்படுகிறது. இதற்கு விசேஷமான ஆசாரமுறைகள் தேவையில்லை. இது குறித்து, கூறப்படும் ஒரு கர்ணபரம்பரைக் கதை பின்வருமாறு.........ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில், ஏழு மருமகள்கள் இருந்தார்கள். அவர்களின் மாமியார், மிகக் கடினமான சுபாவம் உள்ளவர். மருமகள்களை கடுமையாக வேலை வாங்குவதோடு, வயிறார உணவும் வழங்குவதில்லை அந்த மாமியார். ஒரு நாள், அவள் வெளியூர் சென்றிருந்த போது, அத்தனை மருமகள்களும், ஆசை தீர விதவிதமாகச் சமைத்தார்கள். அனைவரும் ஒன்றாகச் சாப்பிட வேண்டுமென்று திட்டமிட்டு, முதலில் இலை போட்டு பரிமாறி முடித்தார்கள். எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது, வாசல் கதவை தட்டும் சப்தம் கேட்டு, ஒருத்தி சென்று, ஜன்னல் வழியாகப் பார்த்த போது, மாமியார் வந்து விட்டது தெரிந்தது. உடனே, அவள் வந்து சொல்ல, எல்லா மருமகள்களும் பதறிவிட்டார்கள். உடனே, பூஜை அறைக்கு வந்து இறைவியை வேண்ட, அவர்கள் எல்லோரும் காற்றில் கரைந்த கற்பூரம் போல் அம்பிகையுடன் ஒன்றிவிட்டார்கள்.இவ்வாறு, தேவியுடன் இணைந்த அந்த பெண்களின் வழி வந்தவர்களே, அதிசயப் பெண்டுகள் செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அழைக்கப்படும் பெண்கள், திருமணம் முதலிய விசேஷங்களுக்கு உடுத்துவது போல், பட்டுப்புடவையோ, மற்ற புடவைகளோ (ஆறு கஜம்) உடுத்தலாம். கல்யாணத்திற்கு சமைப்பப்பது போல் இதற்கும் சமைக்கலாம். பெண்களை வரிசையாக உட்கார வைத்து, பரிமாறி, தத்தம்(கையில் நீர் வார்த்தல்) கொடுத்த பின், அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பிறகு, மற்றவர்களும் சாப்பிடலாம். அவசரமாகச் சமைத்து, சாப்பிடும் வேளையில், அது இயலாமல் போன அந்த மருமகள்கள் நினைவாகச் செய்யப்படுவதால், எந்த கண்டிப்பான, சட்டதிட்டங்களும் இதற்கு தேவையில்லை என்று கூறுகிறார்கள்.
பொதுவாக எல்லா சுமங்கலிப் பிரார்த்தனைகளுக்கும் (இதைச் சுருக்கமாக, பெண்டுகள் என்று அழைப்பது வழக்கம்)வீட்டில் பிறந்த பெண்கள்(நாத்தனார்கள் அல்லது அத்தைகள்) ஆகியோருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். விசேஷங்களுக்கு முன் செய்யப்படும் சுமங்கலிப் பிரார்த்தனையாக இருந்தால், சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் தினத்தை முடிவு செய்த பின், அம்பிகையை வேண்டிக் கொண்டு, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு அதை கோவிலில் சேர்க்கலாம்.ஏதாவது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், விசேஷங்களின் முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய சௌகரியப்படாவிட்டால், தெய்வத்திற்கு முடிந்து வைக்க வேண்டும். அதாவது, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை , மஞ்சள் துணியில் முடிந்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைத்து, கற்பூரம் காட்ட வேண்டும். கட்டாயம், சுமங்கலிப் பிரார்த்தனை பிற்பாடு செய்வதாக வேண்டிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, வீட்டில் யாரேனும் இறைவனடி சேர்ந்திருந்தால், ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்யலாம். ஆனால் சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதில்லை. அம்மாதிரி சந்தர்ப்பங்களில் இதை போல் செய்யலாம். முடிந்து வைப்பதை, ஏதாவது ஒரு நாள் காலையில் நீராடிய பிறகு செய்யலாம்.
வீட்டில், மாமியார் சுமங்கலியாக வாழ்ந்து மறைந்திருந்தால், மருமகள்கள் கட்டாயம் வருடாவருடம் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மாமியாரின் திதிக்கு அடுத்த நாள் இதைச் செய்வது உத்தமம். அன்று இயலாவிட்டால், குறைந்தது ஒரு வாரத்திற்குள் செய்ய வேண்டும்.ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தால், இருவரும், இதைச் சேர்ந்து செய்வது சிறப்பு. பொதுவாக, தனித்தனியே செய்வதில்லை. சில வீடுகளில், சிரார்த்தம் தனித்தனியாகச் செய்வதால், சுமங்கலிப் பிரார்த்தனையும் தனியாகச் செய்கிறார்கள்.தாயாதிகள்(பங்காளிகள்) குடும்பத்தில், யாராவது ஒருவர் சுமங்கலிப் பிரார்த்தனை செய்தால், ஆறு மாத காலம் கழித்தே, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு முறை, பித்ருக்கள் பூலோகம் வந்து பின், அவர்கள் இருப்பிடம் சேர, ஆறு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இடையில் ஏதாவது விசேஷங்கள் வந்தாலும் கூட, முடிந்து வைத்து, ஆறு மாத காலம் முடிந்த பின்பே செய்ய வேண்டும்.செவ்வாய், சனி, ஞாயிறு தவிர மற்ற கிழமைகளில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நாள், கரிநாளாக இருக்கக் கூடாது.அலங்கரித்து வைக்கும் புடவையை, கலம் அல்லது புடவைக் கலம் என்று சொல்வது வழக்கம். பெண்டுகளுக்கு, ஒன்பது கஜம் புடவையைத்தான் புடவைக் கலத்தில் வைப்பார்கள். சில வீடுகளில், புடவைக் கலத்தில் வைக்கப்படும் புடவையை, வீட்டு மருமகள்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், புடவையை நனைப்பதில்லை. மடித்து வைத்து வழிபாடு செய்து விட்டு, மருமகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். சில வீடுகளில், நனைத்துக் காயவைத்துவிட்டு, மடித்து வைத்துக் கொடுப்பார்கள். அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்து, செய்து கொள்ளவும்.
ஐந்து, அல்லது ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிகளை அழைப்பது வழக்கம். அவ்வாறு கணக்கிடும்போது, புடவைக் கலத்தையும் கணக்கில் சேர்த்து எண்ண வேண்டும். வீட்டுப் பெண்கள் எத்தனை பேர், வெளியில் அழைக்க வேண்டியவர்கள் எத்தனை பேர் என்பதை முன்பே முடிவு செய்து கொள்ள வேண்டும்.புடவைக் கலத்தில் வைக்கும் புடவையை மூத்த பெண்ணுக்குத்தான் கொடுக்க வேண்டும். மற்ற பெண்களுக்கு, புடவையை நனைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே, புடவைக்கலத்தில் அருகில் வைத்து, பூ, சந்தனம் குங்குமம் முதலியவை இட்டு அலங்கரித்து, வழிபாடு முடிந்ததும் கொடுத்து விடலாம்.ஒரு வீட்டில், சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தும் போது, நாத்தனார்களுக்குத் தான் புடவைக் கலத்தில் வைத்த புடவை கொடுக்க வேண்டும். ஆனால், பெண்ணுக்குத் திருமணமானதும், பெண்ணுக்குத் தான் அதைக் கொடுக்க வேண்டும். ஆனால், நாத்தனார்களைக் கட்டாயம் அழைக்க வேண்டும். சௌகரியப்படி, அவர்களுக்கு வேறு புடவை எடுக்கலாம்.மதுரைப்பக்கத்தில், வீட்டுப் பெண்கள் அனைவருக்கும ஒன்பது கஜப் புடவை வாங்குவார்கள். சில வீடுகளில், மூத்த பெண்ணுக்கு மட்டும் புடவைக் கலத்தில் வைக்கும் ஒன்பது கஜம் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு ஆறு கஜம் வாங்குவார்கள். சில வீடுகளில், அழைக்கப்படும் பெண்கள் அனைவருக்குமே புடவைகள் வாங்குவார்கள். சௌகரியப்படாவிட்டால், வீட்டுப் பெண்ணுக்கு மட்டும் புடவை வாங்கி, மற்றவர்களுக்கு ரவிக்கைத் துணிகள் வாங்கலாம். அவரவர் வசதிப்படி செய்து கொள்ளலாம். ஆனால், புடவை ரவிக்கைகள், கறுப்பு நூல் கலக்காததாக இருப்பது கட்டாயம்.சில குடும்பங்களில், சுமங்கலிகளோடு ஒரு கன்யா பெண் குழந்தையையும் அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது. அப்படியிருந்தால், அந்தக் குழந்தைக்கும் உடைகள் வாங்க வேண்டும்.முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, ஒரு குடும்பத்தில் மாமியார், மருமகள் இருவரையும் அழைப்பதில்லை. ஒருவரை, அநேகமாக மாமியாரை மட்டுமே அழைப்பார்கள். விதிவிலக்காக, மருமகள், மாமியார் இருவருமே வீட்டுப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அழைக்கலாம்.
புடவை, ரவிக்கைத் துணிகள், குறைந்தது இருபது வெற்றிலைகள், பாக்கு, தேங்காய், பெரிய வாழைப்பழங்கள் இரண்டு, கண்ணாடி, சீப்பு, மஞ்சள் குங்கும டப்பாக்கள், மருதாணி(கோன்), சற்று நீளமாக நறுக்கிய பூச்சரம், கண்ணாடி வளையல்கள், தட்சணையாக ரூபாய்கள்(வசதிப்படி) ஆகியவை வைக்க வேண்டும். இவற்றைக் கவரிலோ அல்லது, தட்டு, கூடைகளில் வைத்துக் கொடுக்கலாம். எவர்சில்வர் தட்டு தவிர்ப்பது நல்லது.
சிரார்த்த காரியங்களுக்கு இருப்பதைப் போல்,இதற்கு எல்லாம் சேர்க்கக் கூடாது என்பதில்லை. இங்கிலீஷ் காய்கறிகள் எனக் குறிப்பிடப்படும், முட்டைக் கோஸ், பீன்ஸ், நூல்கோல், இவற்றோடு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற காய்கறிகளைச் சேர்க்கலாம்.பொடி வகைகளில், புதிதாக அரைத்த குழம்புப் பொடி, மிளகாய்ப் பொடி, வரட்டு அரிசி மாவு ஆகியவற்றை உபயோகிக்கலாம். சர்க்கரை, கேசரிப்பவுடர், முந்திரிப்பருப்பு, தனியா, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கலாம். வறுத்து அரைத்து சமைக்கலாம். சிலர் கேசரிப்பவுடர் சேர்ப்பதில்லை. வனஸ்பதி கூட சில வீடுகளில் உபயோகிக்கிறார்கள். பொதுவாக, பாசிப்பருப்பு பாயசம், வெள்ளரி, வெண்டைக்காய் அல்லது தேங்காய் மட்டும் அரைத்து தயிர்ப்பச்சடி, மாங்காய் அல்லது விளாம்பழம் போட்டு இனிப்புப் பச்சடி, வாழைக்காய் அல்லது கத்தரிக்காய் காரம் போட்ட பொரியல், புடலை, அவரைக்காய், கொத்தவரங்காய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் போட்டு, தேங்காய் போட்ட பொரியல், பிட்லை(ரசவாங்கி), வெண்பூசணி அல்லது புடலை பொரித்த கூட்டு, மோர்க்குழம்பு, தக்காளி ரசம், கலந்த சாத வகைகள் இரண்டு, கறிவேப்பிலை அல்லது இஞ்சித் துவையல், வடை(உளுந்து), அப்பம் அல்லது அதிரசம் (அவரவர் வீட்டு வழக்கப்படி) ஆகியவை பொதுவாகச் செய்வது வழக்கம்.இவற்றோடு, வாழை, மா, பலா ஆகிய பழவகைகளில், எல்லாவற்றையுமோ அல்லது கிடைப்பவற்றையோ போடலாம். திராட்சையும் போடலாம். இப்போது, ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் போடுகிறார்கள். பொதுவாக, இரண்டு பொரியல், கூட்டு (பிட்லை உள்பட) ஆகியவை செய்வது வழக்கம். சில வீடுகளில், நான்கு வித வெல்லக் கூட்டுகள் செய்கிறார்கள். உப்பு, இனிப்பு கோசுமல்லி, வறுவல், தேங்குழல் அல்லது உளுந்து அப்பளம்(புதிதாக இட்டு ஈரமாகப் பொரித்தது) போடுவதும், வேப்பிலைக் கட்டி, புதிதாகச் செய்த ஊறுகாயையும் போடுவதும், சில வீடுகளில் வழக்கமாக இருக்கிறது. இனிப்புப் பச்சடிக்கு பதிலாக, புளிப்பச்சடி போடுவதும் உண்டு.
அப்பம் அல்லது அதிரசத்திற்குப் பதிலாக, போளி, கோதுமை அல்வா,சுகியன் ஆகியவை போடுவதும் சில வீடுகளில் வழக்கத்தில் உள்ளது.பிட்லையில் கத்தரிக்காய் தான் போடுவது வழக்கம். பொதுவாக, பாகற்காய் சேர்ப்பதில்லை.கலந்த சாத வகைகளில், தேங்காய், எலுமிச்சை, புளியோதரை ஆகியவற்றில் இரண்டு வகை செய்வது வழக்கம். சில வீடுகளில், தயிர்சாதமும் செய்கிறார்கள்.சிரார்த்த தினத்திற்கு மறுநாளோ அல்லது அதை ஒட்டியோ, சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதாக இருந்தால், எள்ளுருண்டை கட்டாயம் செய்ய வேண்டும். விசேஷங்களை ஒட்டிச் செய்வதாக இருந்தால் பொதுவாக, எள்ளுருண்டை சேர்ப்பதில்லை. மேற்கூறிய யாவற்றையும், அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு செய்து கொள்ளவும்.
புடவையைக் கொசுவம் வைத்து, அலங்கரித்து வழிபடும் முறை:
இதற்கு, அழைக்க வேண்டிய சுமங்கலிகள் உள்ளூரில் இருந்தால், மஞ்சள், குங்குமம், நல்லெண்ணை, சீயக்காய், வாசனைப்பொடி இவற்றோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களை மணையில் அமர்த்தி, குங்குமம் இட்டு, மஞ்சள் முதலியவைகளைக் கொடுத்து, 'எங்கள் இல்லத்தில், பெண்டுகளுக்கு வந்து, பெரியவர்களாக இருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்' என்று கூறி நமஸ்கரிக்க வேண்டும். இதற்கு, 'சுமங்கலிப் பெண்டுகளை வரிப்பது' என்று பெயர். அவர்கள், மறுநாள் வீட்டுக்கு வந்து குளிப்பதாக இருந்தால், குங்குமம் வைத்து அழைத்து விட்டு வந்து விடலாம். மறுநாள் வீட்டுக்கு வந்ததும், எண்ணை சீயக்காய் ஆகியவற்றைக் கொடுக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், முதல் நாளே, அவர்கள் உடுத்த வேண்டிய ஒன்பது கஜம் புடவையை வாங்கி வந்து விட வேண்டும். மறுநாள் காலையில் நனைத்து உலர்த்த சௌகரியமாக இருக்கும். அழைக்க வேண்டிய சுமங்கலிகள் வெளியூரில் இருந்தால், பெண்டுகள் தினத்தன்று காலையில், வெளியூரிலிருந்து வந்தவர்களை வரிக்கலாம்.சுமங்கலிப் பிரார்த்தனை தினத்தன்று அதிகாலையில், பூஜை அறையில் விளக்கேற்றி, புடவைக்கலத்திற்கென்று வாங்கியிருக்கும் புடவை, ரவிக்கைத் துணியை, கோலம் போட்ட மணையில், ஒரு தட்டு அல்லது தாம்பாளத்தின் மீது வைக்க வேண்டும். மடிப்பைக் கலைத்து விட்டு, சுமாராக மடித்து வைக்கலாம். புடவைத் தலைப்பின் நுனி சற்று வெளியில் இருக்க வேண்டும் (எண்ணை வைக்க).ஒரு தட்டில், எண்ணை, சீயக்காய், மஞ்சள், குங்குமம், வாசனைப்பொடி இவற்றை வைக்க வேண்டும். மற்றொரு தட்டில், அட்சதை, புதிதாகக் கரைத்த வாசனை சந்தனம், வெற்றிலை பாக்கு பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.
பிறகு, வீட்டுக்கு மூத்த சுமங்கலிப் பெண்மணி, மணையில் வைத்திருக்கும் புடவைத் தலைப்பின் நுனியில், மூன்று சொட்டு எண்ணை வைக்க வேண்டும். பிறகு, புடவையின் மேலாக, மஞ்சள், வாசனைபொடி இவற்றைத் தூவி, குங்குமம் வைத்த பின், அட்சதை, கரைத்த சந்தனம் இவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் பெயரை எல்லாம் ஒவ்வொன்றாகக் கூறி, 'எல்லோரும் வந்து, பிரார்த்தனையை நடத்திக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி, அட்சதையைப் பரவலாகப் புடவையின் மீது தெளித்து, நமஸ்கரிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கை நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு, வீட்டு மருமகள்கள் ஒவ்வொருவராக நமஸ்கரிக்க வேண்டும். வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் பெயர் தெரியாவிட்டால், 'தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர் என சுமங்கலியாக இந்த இல்லத்தில் வாழ்ந்து மறைந்த அனைவரும் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி நமஸ்கரிக்கலாம்.
யாருக்கு புடவை கொடுக்கப்பட இருக்கிறதோ, அந்தப் பெண்ணை முதலில் மணையில் அமர்த்தி, அவருக்கு சந்தனம், குங்குமம் கொடுத்து, உச்சந்தலையில், மூன்று முறை எண்ணை வைக்க வேண்டும். எண்ணை வைப்பவர், தன் இரு கட்டை விரல்களை மட்டும் உபயோகித்து எண்ணை வைக்க வேண்டும். சிலர் வலக்கை மூன்று விரல்களாலும் எண்ணை வைப்பார்கள். பிறகு, அவருக்கு, எண்ணை, சீயக்காய் பொடி, வாசனைப் பொடி ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். பிறகு, மற்ற பெண்களுக்கு எண்ணை வைக்கலாம். இவ்வாறு வைப்பதை, வீட்டு மருமகள்கள் செய்ய வேண்டும்.
புடவைக் கலப் புடவையை, நனைக்கும் போது, முதலில், தலைப்பை விட்டு நனைக்க வேண்டும். தலைப்பு கிழக்கு நோக்கி இருக்குமாறு உலர்த்த வேண்டும். உலர்த்தும் போது, கவனமாக உலர்த்த வேண்டும். கம்பிகளில் புடவை சிக்கி விடக் கூடாது. தரையில் அல்லது கைப்பிடிச் சுவரில் உலர்த்துவதானால், அது சுத்தமாக இருக்க வேண்டும். துளி ஈரம் இல்லாமல் புடவை காய வேண்டியது முக்கியம். ரவிக்கைத் துணியையும் உடன் உலர்த்த வேண்டும்.
பிறகு, அழைத்திருக்கும் பெண்களின் புடவைகளை எல்லாம் (வாங்கி வந்திருந்தால்) நனைத்து உலர்த்த வேண்டும். வீட்டு மருமகள்கள் உடுத்த வேண்டிய புடவைகளையும் உலர்த்த வேண்டும். சில வீடுகளில், வீட்டு ஆண்களின் உடைகளையும் நனைத்து உலர்த்துகிறார்கள். பெண்டுகள் தினத்தன்று காலையில் இவ்வாறு உலர்த்துவது தான் சிறப்பு. முன் தினம் செய்வதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
வீட்டு மருமகள்கள் உட்பட எல்லோரும் எண்ணைக் குளியல் செய்வது அவசியம். குளித்து விட்டு, உலர்த்தி வைத்திருக்கும் உடைகளை அணிய வேண்டும்.
வீட்டில், சுமங்கலிகளை உட்கார்த்துவதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் அறை அல்லது ஹாலை இருமுறை துடைக்க வேண்டும். கிழக்குப் பார்த்த இடமாகத் தேர்ந்தெடுத்து, அங்கு சற்றுப் பெரிதாக மாக்கோலமிட்டு, பெரிய பலகையைப் போட்டு அதற்கும் கோலமிட வேண்டும்.
சுமங்கலிகளை உட்கார வைக்கும் இடத்தில், சின்ன சின்ன மாக்கோலமிடவேண்டும். எல்லாக் கோலத்திற்கும் காவி இட வேண்டும். புடவைக் கலமும் அதன் அருகில், அதை வாங்கிக் கொள்பவர் சாப்பிடும் இடமும் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும். மற்ற பெண்கள் இலை, கிழக்கு, மேற்காக இருப்பது சிறப்பு. வடக்குப் பார்த்தும் இருக்கலாம்.
பலகையில் மாக்கோலம் காய்ந்ததும், அதன் மேல் உலர்ந்த புடவைக்கலப் புடவையை கொசுவி வைக்க வேண்டும். அதாவது, புடவையைக் கொசுவம் வைத்து, தலைப்பால், கொசுவத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்டி, அதன் மேல் ரவிக்கைத் துணியைக் கட்டி, ஒருவர் அமர்ந்திருப்பது போல் மணையின் மேல் வைக்க வேண்டும். அதற்கு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். மஞ்சள் பொடியைப் பிசைந்து, மூக்கு போல் செய்து, அதை புடவையின் மேற்புறத்தில் வைத்து, அதில், மூக்குத்தி வைக்க வேண்டும். தங்கச் சங்கிலி, இயன்ற ஆபரணங்கள் சாற்றி, பூமாலைகள் சாற்ற வேண்டும். இரட்டை மாலையாக சாற்றுவது சிறப்பு. மல்லிகை போன்ற வாசனை மாலைகளையே சாற்ற வேண்டும்.புடவையின் பின்னால், கண்ணாடி ஒன்றை வைத்து, அதற்கும், பொட்டு வைத்து, பூச்சரம் சாற்றலாம். கலத்தின் இருபுறமும், ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றவும். எல்லாம் நிறைவடையும் வரை விளக்கு எரிவது அவசியம்.கலத்தின் அருகில், செம்பு அல்லது பாத்திரங்களில், பானகம், நீர்மோர், ஆகியவற்றைக் கரைத்து வைக்க வேண்டும்.சுக்கு வெல்லம் இரண்டையும் சேர்த்து தட்டி, பிசைந்து உருண்டை செய்து ஒரு தட்டில் அதை வைத்து, அதையும் கலத்தின் அருகில் வைக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பாக நடத்தும் சுமங்கலிப் பிரார்த்தனையாக இருந்தால், மணமகளின் புடவை, நகைகள் முதலியவற்றையும் கலத்தின் முன் வைக்கிறார்கள்.
ஒரு தட்டில் மஞ்சள் பொடியைப் பிசைந்து கொள்ளவும். பிசைந்ததில் கொஞ்சம் எடுத்து, எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில், சின்னச் சின்ன மஞ்சள் உருண்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும். மீதியை நலங்கு இட வைத்துக் கொள்ளலாம். நலங்கு (மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்தது) தயார் செய்யவும்.
பூச்சரத்தில், தாம்பூலத்திற்குக் கொடுக்க நறுக்கி வைத்துக் கொண்டு, அது தவிரவும் , சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதைக் கால் அலம்பிய பின் கொடுக்க வேண்டும். தாம்பூலம் கொடுக்கத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில், சாப்பிட்ட பின் போடுவதற்கு, வாசனைப் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்து வைக்கவும். பானகம், நீர்மோர் கொடுக்க , சின்ன டம்ளர்கள் எடுத்து வைக்கவும்.புடவைக் கலத்திற்கு அருகில், ஒரு தட்டில், வெற்றிலை பாக்கு, பழங்கள், சந்தனம், குங்குமம் அட்சதை, ஊதுபத்தி அல்லது சாம்பிராணி,ஒரு தட்டில் கற்பூரம் (கொஞ்சம் பெரிய கட்டியாக இருந்தால் நல்லது. இல்லையென்றால், பக்கத்தில் கொஞ்சம் கற்பூரம் வைத்துக் கொண்டு சேர்த்துக் கொண்டு வரலாம்).
ஒரு தட்டில் ஆரத்தி கரைத்து வைக்கவும்.
உதிரிப்பூக்களையும் ஒரு தட்டில் வைக்கவேண்டும். மேற்கூறியவை, கலத்தின் அருகில் இருக்க வேண்டும். கலத்தின் முன்பாக இலை போடுவதால், அருகிலேயே தான் வைக்க வேண்டும்.இவை எல்லாம் செய்த பின்னரே, சுமங்கலிகளை அழைக்க வேண்டும். அவர்களைக் காக்க வைக்கக் கூடாது.அழைத்திருக்கும் பெண்கள் (பெண்டுகள்) அனைவரும் குளித்துத் தயாரான பின், ஒவ்வொருவரையும் அமரச் செய்து, சந்தனம் குங்குமம் தரவும். பின், சின்ன உருண்டைகளாக்கி வைத்திருக்கும் மஞ்சளைக் கொடுத்து, கால்களில் பூசி அலம்பி வரச் சொல்லவும். சிறு துண்டுகளாக்கி வைத்திருக்கும் பூச்சரம் கொடுத்து, வைத்துக் கொள்ளச் சொல்லவும்.கலத்தின் முன்பும், சாப்பிடும் இடத்தில் போட்டிருக்கும் கோலங்களின் மேலும், இலை போட்டு பரிமாற வேண்டும். கலத்தின் முன் இரட்டையாக நுனி வாழை இலை போடவேண்டும். மற்றவர்களுக்கு ஒற்றை இலை போடலாம். சில வீடுகளில் அனைவருக்குமே இரட்டை இலை போடுவார்கள். முதலில், அன்ன சுத்தியாக, சிறிது நெய் விட்டு விட்டு, பரிமாற ஆரம்பிக்கவும். முதலில் கலத்திற்கு பரிமாறி விட்டே, மற்ற இலைகளுக்குப் பரிமாற வேண்டும். முடிக்கும் போது தெற்கே முடிக்காமல் மற்ற திசைகளில் முடிக்கவும். அதற்குத் தகுந்தாற்போல் இலை போட வேண்டும்.எல்லாம் பரிமாறி, கொஞ்சம் அன்னமும் பரிமாறி, மீண்டும் கொஞ்சம் நெய் ஊற்றிய பின், பெண்டுகளை, வீட்டு வராந்தாவிலோ அல்லது சாப்பிடும் ஹாலின் வெளியேயோ(சௌகரியப்படி) நிற்க வைக்க வேண்டும்.அவர்கள் நிற்கும் இடத்தின் முன்பாக, கதவுகள் இருக்க வேண்டியது அவசியம். பின், கதவை மூடி விட்டு, வீட்டு மருமகள்கள், கைகளைத் தட்டி, வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அழைக்க வேண்டும். நிறைவாக, 'தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர் என சுமங்கலியாக இந்த இல்லத்தில் வாழ்ந்து மறைந்த அனைவரும் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி விட்டு, கதவைத் திறந்து விடவும். அனைவரையும் உள்ளே வந்து அமரச் சொல்லவும்.சில வீடுகளில், பரிமாறும் முன்பே, பெண்டுகளை வெளியே நிற்க வைத்து, கதவுகளை மூடிவிட்டு, பின் பரிமாறி முடித்து, அதற்குப் பிறகு கைகளைத் தட்டி அழைப்பார்கள். சில வீடுகளில், கலத்திற்குக் கற்பூரம் ஏற்றிய பின்பே பெண்டுகளை அமர்த்துவதும் வழக்கமாக இருக்கிறது.
பெண்டுகள் எல்லோரும் வந்து அமர்ந்த பிறகு, வீட்டு மருமகள்களில் மூத்தவர், அல்லது மாமியார், புடவைக் கலத்திற்கு, சந்தனமும் அட்சதையுமாகக் கரைத்துத் தெளித்து விட்டு, பின் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி ஏற்றி, காண்பிக்க வேண்டும். அதன் பின், இலையில் உள்ளதை நிவேதனம் செய்ய வேண்டும். கற்பூரம் ஏற்றி, முதலில் கலத்திற்கு சுற்றிக் காண்பித்து விட்டு, அமர்ந்திருப்பவர்கள் முன்பாகக் காட்டவும்.அதன் பின், கற்பூரத்தை கலத்தின் முன் வைத்து, நீர் சுற்றி, பூ, அட்சதையும் சுற்றிப் போட்டு வணங்கவும். அதற்கு பின், தட்டை எல்லோருக்கும்(பெண்டுகள் உட்பட) காட்டி கண்களில் ஒற்றிக் கொள்ளச் சொல்லலாம்.வீட்டில் இருப்போர்(ஆண்களும்) அனைவரும், பூ, அட்சதை போட்டு கலத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். அதன் பின், கலத்திற்கு ஆரத்தி எடுத்து விட்டு, பெண்டுகளுக்கும் காண்பிக்கவும். அவ்வாறு செய்யும் போது, வீட்டில் யாராவது ஐந்து மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருந்தால் அவர்கள் நிற்கக் கூடாது.பஞ்சபாத்திர உத்திரிணியில் நீர் எடுத்து, முதலில் கலத்தில் சிறிதளவு நீர் விட்டு, அதற்கு பின், பெண்டுகள் அனைவரையும் ஒன்று போல் கை நீட்டச் சொல்லி, நீர் வார்க்கவும். இதற்கு தத்தம் குற்றுவது என்று சொல்வார்கள்.வீட்டின் மூத்த மருமகளோ அல்லது மாமியாரோ தான் இதைச் செய்வது வழக்கம். பெண்டுகள், அந்த நீரால் இலையைச் சுற்றிய பின் சாப்பிடச் சொல்லவும். இவ்வாறு தத்தம் குற்றும் வேளை, ராகு காலம் இல்லாமல் இருக்க வேண்டும். 'இருந்து நிதானமாகச் சாப்பிடுங்கள்' என்று சொல்லவும். இலையைப் பார்த்துப் பரிமாறவும். கேட்கும் வரை வைத்துக் கொள்ளக் கூடாது. 'எல்லாம் ருசியாக இருக்கிறதா?' என்று கேட்பது சரியல்ல.
சாப்பிட்டு முடித்த பின், கலத்திற்கு உத்தரா போஜனத்திற்காக நீர் வார்த்து விட்டு, பெண்டுகளை இடது கையை நீட்டச் சொல்லி நீர் வார்க்கவும். பின் மீண்டும் வலக்கையில் நீர் விட்டு அருந்திய பின், கை அலம்பச் சொல்லி உபசரிக்கலாம்.அதன் பின், அனைவரையும் பாய் அல்லது ஜமக்காளம் விரித்து அமரச் சொல்லி, பானகம், நீர் மோர், சுக்கு வெல்லம் ஆகியவற்றைத் தரவும். ஒவ்வொருவர் கால்களிலும், பிசைந்த மஞ்சளைப் பூசி, நலங்கு இடவும், சந்தனம், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் தரவும். இவ்வாறு செய்யும் போது, கலத்திற்கும் துளித் துளி, பானகம் நீர் மோர் ஊற்றி, தாம்பூலத்தில் ஒரு செட் வைக்க வேண்டும். பிறகு அனைவரையும் வரிசையாக நிற்கச் சொல்லி, அட்சதை தந்து, வீட்டில் உள்ளோர் அனைவரும் நமஸ்கரிக்கவும். அவர்கள் கையில் தரும் அட்சதையிலேயே கொஞ்சத்தை தனியாக வாங்கி பத்திரப்படுத்தி வைத்தால், பெண்டுகளுக்கு வர இயலாத உறவினர்களுக்கு அனுப்பச் சௌகரியமாக இருக்கும் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றைத் தந்து போட்டுக் கொள்ளச் சொல்லவும். வெற்றிலை போட்டு சிறிது நேரம் ஆன பின்பே பெண்டுகளுக்கு உட்கார்ந்தவர்கள் ஒன்பது கஜப் புடவையை மாற்றலாம். பெண்டுகளுக்கு அமர்ந்தவர்கள் இரவில் பலகாரம் தான் சாப்பிட வேண்டும்.வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடும் போது, புடவைக் கலத்தின் முன் வைத்த இலையை, சற்று வடக்குப் பார்த்து இழுத்து விட்டுவிட்டு, அந்த இலையை வீட்டு மருமகள்கள் சாப்பிட உபயோகிக்கலாம். இரு இலைகள் இருப்பதால் இருவர் சாப்பிடலாம். வீட்டு ஆண்களும் சாப்பிடலாம். அதில் இருக்கும் பிரசாதத்தை அனைவருக்கும் கொஞ்சம் போட்டு சாப்பிடச் சொல்லவும்.எல்லாம் ஆனதும், சிறிது நேரம் கழித்து, மீண்டும் கலத்தின் முன் விளக்கேற்றி, புடவை வாங்கும் பெண்ணை மணையில் அமர்த்தி, சந்தனம் குங்குமம் கொடுத்து, கலத்திற்கு போட்ட மாலையைப் போட்டு, ஒரு தாம்பாளத்தில், கலத்தில் வைத்த புடவையையும், தாம்பூலத்தையும் தரவும். அவர் அதை அணிந்து கொண்டு வந்து பெரியவர்களை நமஸ்கரிக்க வேண்டும். கலத்திற்கு போட்ட மாலையை, வீட்டில் திருமணமாகாத பெண் இருந்தால் அவளுக்குப் போட்டு ஸ்வாமியை நமஸ்கரிக்கச் சொல்லலாம். புடவை வாங்கும் பெண்ணுக்கு பூச்சரம் அணிவிக்கலாம்.மேலே பொதுவான முறைகளே கூறப்பட்டிருக்கிறது. அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு தேவையான மாற்றங்களுடன் அனுசரிக்கவும்.புடவையை நனைக்காமல் அப்படியே வைக்கும் வழக்கம் இருந்தாலும் கூட, புடவைக் கலம் அலங்கரிக்கும் முறை மட்டும் மாறும். அதாவது, அப்படியே புதுப்புடவையை வைத்து, பூ,சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மற்றவை எல்லாம் மேற்கூறியவை போல் தான்.பூவாடைப்பானை வைத்து வழிபாடு செய்வதாக இருந்தால், பானைக்குள் வைத்த பாவாடை சட்டையை ஒரு கன்யாப் பெண் குழந்தைக்குத் தருவார்கள். மற்றபடி, பெண்டுகளை அழைப்பது, உணவளிப்பது எல்லாம் முன் சொன்னது போல் தான் செய்வது வழக்கம்.பொதுவாக, வீட்டுப்பெண்ணின் திருமணம் என்றால் திருமணத்திற்கு முன்பாகவும், பிள்ளைக்குத் திருமணம் என்றால், திருமணம் முடிந்த பின், மருமகள் வீட்டுக்கு வந்த பின்பே சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.நம் குடும்ப வழக்கப்படி செய்யும் முன்னோர் வழிபாட்டு முறைகளை தவறாது அனுசரிப்பது, குடும்பத்தைக் காத்து வாழையடி வாழைய வளரச் செய்யும். ஆகவே, அவற்றைத் தவறாது அனுசரித்து,வெற்றி பெறுவோம்!
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Friday, January 19, 2018

காஞ்சி மகானின் தெய்வீக தன்மை

"குருவே சரணம்" மகா பெரியவா நாங்கள் உங்கள் திரு பாதத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறோம், எங்களுக்கு உங்கள் ஆசி வேண்டும். காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். “தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை.
மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார். பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார்.
பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.
அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது. குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம்
ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது. பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது. “க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர்.
அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர். முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.
அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது? காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் – மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார்.
அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்ப்பூட்டுபவை…. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Thursday, January 18, 2018

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க

ஓஷோ சொல்லும் வழிமுறை :-
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது...அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்... !!!

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, January 13, 2018

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


Wednesday, January 10, 2018

மன்னிப்பு

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது
'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.
ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது? நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..
மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர் களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.
பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.
மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.....
மன்னித்து மகான் ஆகுங்கள்

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Friday, January 5, 2018

" சோற்றுப் பருக்கையின் கண்ணீர் " கதை

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது,உற்று கவனித்தேன்..தட்டிற்கு வெளியே இரண்டு சோற்று பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம் அழுதுகொண்டிருந்தன."எதுக்கு இப்படி அழறீங்க"
என்று கேட்டேன்?.அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.
"ஒரு ஏழை விவசாயி...கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது, நாற்று நட்டு,களை பறித்து, பயிர் செய்து, நீர் பாய்ச்சி ரொம்ப
கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்..நாங்களும் நல்லா வளர்ந்தோம்,என்னோட சகோதர மணிகளில் சிலரை எலிகள் நாசம் செய்தன..பறவைகள் கொத்தித் தின்றன..தப்பிப் பிழைத்த நாங்கள்
அறுவடைக்குத் தயாரானோம்.அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து, தூற்றி அதிலும் வீணாகி போன சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.அப்புறம் நெல்
மணிகளிலிருந்து உமி நீக்கிய போது காணாமல் போன சகோதரமணிகள் நிறைய பேர்.விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும்போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில்சிலரும், எடை போட்டபோது கொஞ்சம் பேரும்வீட்டுக்கு நீங்கள் வாங்கி வந்த போது, அரிசி களைந்து சமைக்கும் போது என்று எல்லாவற்றிலும்தப்பிப் பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்க
தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.இத்தனை பேர் உழைப்பில் விளைந்த
என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை.. இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன செய்ய?" என்றது.உணவையும், உழைப்பையும் வீணாக்காதீர்கள்;
உணவே மருந்து....
உணவே உடல்...
உணவே உயிர்....
நன்றி திரு கதிரவன்

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Wednesday, January 3, 2018

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!!

இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்துவந்தாள்.ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.இந்திரன்,கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,
இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.
மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான். உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.வாருங்கள் அந்த அறைக்குச்சென்று கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....அதில்,,,
இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.
இதுதான் விதி!!
விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!
யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?! 
வாழும் காலம் நிரந்தரம் இல்லை? வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!
(படித்ததில் பிடித்தது)   
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Tuesday, January 2, 2018

நம் வேலையை நாம் ஒழுங்காகப் பார்த்தால் போதும்

காட்டில் முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்கு பூச்சிகளிடம் பேசும் திறன் உண்டு. ஒருநாள் ஒரு புழு அவர் இருந்த வழியே வேகமாக ஊர்ந்து போனது.
இவர் பாட்டுக்கு இருக்க வேண்டியது தானே! சும்மா இருக்காமல் அந்தப் புழுவிடம் பேச்சுக்கொடுத்தார்.சிலருடைய குணாதிசயமே இதுதான்! "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி' என்கிற கதையாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதே வேலை! இந்த முனிவரும் வம்புக்கென்றே புழுவிடம் பேச்சுக்கொடுத்தார்.
"ஏ புழுவே! என்ன கொள்ளை போகிறதாம்! இவ்வளவு வேகமா போறே! மெதுவா போக வேண்டியது தானே,'' என்றார்."சாமி! கொஞ்சம் கிழக்கே திரும்பிப்பாருங்க. அங்கே வேகமாக ஒரு வண்டி வர்றது தெரியுதா! அது என் மேல ஏறினா நான் நசுங்கிப் போயிடுவேன்.என்னைக் காப்பாத்த நான் வேகமாக ஊர்ந்து கிட்டு இருக்கேன். உமக்கென்ன அதில் கஷ்டம்?'' என்றது புழு."நீ இருந்து என்ன பண்ணப் போறே! செத்து தான் தொலையேன், உன்னாலே இந்த உலகத்துக்கு என்ன லாபம்?'' என்று புழுவிடம் சொன்னார் முனிவர்.
 "சாமி! உமக்கு என் மேலே பொறாமை. அதனால் கோபத்துலே ஏதேதோ பிதற்றுகிறீர்! உம்மைப் போல நான் காலையிலே சந்தியாவந்தனம் பண்ணனுமினு கட்டாயமில்லே!மத்தியானம் சாப்பிடும் முன் சுவாமிக்கு பூஜை காட்ட அவசியமில்லே! எனக்கு சொந்தக்காரங்களையோ நண்பர்களையோ உபசரிக்கணுங்கிற தேவையுமில்லே! என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணுங்கிற கடமையும் இல்லே! எந்த தேவையும் இல்லாத என்னைப் பார்த்து, எல்லாத்தேவையும் கடமையும் உடைய உம்மைப் போன்ற மானிட ஜென்மங்களுக்கு பொறாமை இருக்கத்தானே செய்யும்,'' என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய் விட்டது அந்தப் புழு.
இந்த உலகத்திலேயே பொறாமைப்படுகிற ஒரே ஜென்மம் மனித ஜென்மம் தான். முனிவரைப் போல அடுத்தவன் என்ன செய்கிறான் என்று நாம் கவனிக்கக்கூடாது.நம் வேலையை நாம் ஒழுங்காகப் பார்த்தால் போதும். அவன் தான் நல்ல மனின். இதை விட்டு அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைத்தால் புழு கூட மனிதனை மதிக்காது.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677