Saturday, January 4, 2020

நீங்கள் காலையில் எழுந்ததும், பத்திரிகையைப் படிப்பதன் காரணம் என்ன தெரியுமா..??? அவைகள், அந்த உணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறது.காலையில் எழுந்ததும், டீயையோ அல்லது காப்பியையோ அருந்துவதற்கு முன், அதைப் படிக்கவே ஆசைப்படுகிறீர்கள்.ஆனால்,அவைகளில் எந்தப் புதுமையும் இல்லை. அவைகளைக் கூர்ந்து கவனித்தால், பழைய செயல்கள்தான், இடம் மாறி, ஆள்மாறி வந்து கொண்டிருப்பதை அறிவீர்கள்.ஆனால் அது உங்களுக்கு ஒருவித திருப்தியைக் கொடுக்கிறது.
எங்கேயோ ஒருவன் கொல்லப்படுகிறான்,எங்கேயோ, யாரோ ஊழல் செய்கிறார்கள், எங்கேயோ திருட்டு நடக்கிறது.எவளோ ஒருத்தி, யாருடனோ ஓடிவிடுகிறாள்,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதையெல்லாம் மீண்டும், மீண்டும், காலையில் எழுந்ததும் தினந்தோறும் படிக்கிறீர். அப்பொழுது உங்களிடம் ஒருவித அமைதி ஏற்படுகிறது.நீங்கள் "இவைகளை யெல்லாம் பார்க்கும்பொழுது,நாம் எவ்வளவோ தேவலை.இந்த உலகம் கேவலமாகப் போய்க்கொண்டே இருக்கிறது.நாம் பிறர் மனைவி மேல் ஆசைப்பட்டு,அவளுடன் ஓடவில்லை,நாம் யாரையும் கொலை செய்யவில்லை,எதையும் திருடவில்லை சிலசமயம் அப்படி நினைத்திருக்கலாம்.நினைப்பது என்பது ஒரு பெரிய குற்றமா என்ன.....??? நாம் அந்த செயலை செய்யவே இல்லையே.... இப்படி உங்களையே நீங்கள் ஒப்பிட்டுக்கொண்டு சமாதானம் அடைவதற்குத்தான்,அந்தக் காலை பத்திரிகை உங்களுக்கு உதவி செய்கிறது.
அப்படி நீங்கள் அமைதி அடையும்பொழுது, உங்களிடம் எந்த மாற்றமும் ஏற்பட வழியில்லை.நீங்கள் பழையபடியேதான் இருப்பீர்கள்.அடுத்தவர்களைக் கவனிப்பதை ஒரு கட்டத்தில் விட்டுவிடுங்கள். அது தேவையற்றது.அதனால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.உங்கள் சக்திதான் வீணாகச் செலவழிகிறது.
அதற்கு பதில்,உங்களையே நீங்கள் கவனிக்க முயலுங்கள்.அப்பொழுது உங்களிடம் ஒரு பெரிய மாற்றம் மெல்ல ஏற்படுவதை உணர்வீர்கள்.நீங்கள் உங்கள் கோபத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால்,ஒரு நாள், அது திடீரென்று மறைவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில், வெறுமனே பார்ப்பதில்,நீங்கள் அதற்கு எந்த சக்தியையும் கொடுக்கவில்லை.அப்பொழுது அது,ஒரு நாள் இறந்துதானே அல்லது மறைந்துதானே செல்ல வேண்டும்...???இதை மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி நீங்கள் உங்களைப் பார்ப்பதினால், உங்களிடம் உள்ள கெட்ட தன்மைகள் மறைந்து,நல்ல தன்மைகள் மேலும் வளர உதவி செய்யும்.அந்த கெட்ட எண்ணங்களுக்குப் போகும் சக்தி,இப்பொழுது நல்ல தன்மையை நோக்கித் தானாகவே செல்கிறது.அப்பொழுது அவைகள் உயிர்த்துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது.இப்படி உங்கள் துன்பங்கள் மறைய,இன்பங்கள் பெருக ஆரம்பிக்கின்றன.உங்கள் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை தவழும் சமயத்தில்,நீங்கள் எந்த காரணமும் இன்றி உரக்க சிரிப்பீர்கள்.அதாவது, உங்களுடைய சிரிக்கும் தன்மை இப்பொழுது அதிகமாகிறது.உங்களுடைய பழைய தொங்கும் முகத்தில்,இப்பொழுது ஒரு புதிய உயிரோட்டம், உங்கள் முகத்தில் ஒரு பொலிவும், அழகும் ஏற்படுகிறது.அப்பொழுது,நீங்கள் வாழ்க்கையை, விளையாட்டாக எடுத்துக் கொள்கிறீர்கள்.உங்களுடைய இறுக்கம் நிறைந்த மனம், இப்பொழுது இலேசாக இருக்கிறது.நீங்கள் மேலும், மேலும் ஒரு குழந்தையைப் போல் கள்ளம் கபடமற்ற தன்மையை அடைகிறீர்கள்.
எதை நீங்கள் பிரச்சனை என்று நினைக்கிறீர்களோ,அதை வெறுமனே பாருங்கள். அந்தப் பிரச்சனையின், பக்கத்தில் ஒரு மூன்றாவது மனிதனைப் போல நின்று கொண்டு பாருங்கள்.அது அங்கு உண்மையிலேயே இருக்கிறதா அல்லது நீங்களாக அதை உண்டு பண்ணிக் கொண்டதா என்று கவனியுங்கள்.அப்படி அதை நீங்கள் ஆழ்ந்து கவனிக்க, கவனிக்க,அது குறைந்து கொண்டே வந்து,ஒரு கட்டத்தில் மறைவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு, உங்கள் சக்தியை கவனித்தலில் செலவழிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு,அது சிறுத்துக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் அது இல்லாமலே ஆகிவிடும்.அப்பொழுது நீங்கள் மனம் விட்டுச் சிரிப்பீர்கள்.
ஆகவே, பிரச்சினை என்பது கற்பனையானது.சும்மா வெறுமனே, அதைச் சுற்றி வந்து நன்றாகக் கவனியுங்கள்.அதை ஒவ்வொரு கோணத்திலும் கவனியுங்கள்.அப்பொழுது அது ஒரு மாயப்பிசாசு என்பது புரியும்.நீங்கள் அதை விரும்புகிறீர்கள்.ஆகவேதான், அது அங்கு இருக்கிறது என்பது விளங்கும்.நீங்கள் அதை அழைத்தீர்கள்.அது உங்களிடம் வந்தது.அவ்வளவுதான்.
- ஓஷோ-தந்தரா அனுபவம்