Monday, January 23, 2017

" கடவுள் மிகப்பெரியவர் "

வருஷம்பூரா பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப் பட்டதால் மனம் வெறுத்துப் போன ஒரு விவசாயி கடவுள்கிட்டே கேட்டான்,” ஏன் ஆண்டவனே உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன? ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்கறே..அதே மாதிரி காத்து அடிச்சாப் பத்தாதா? புயலாய்த்தான் அடிக்கணுமா? வெயில் அடிச்சாப் பரவாயில்லே...ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா? “உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை...எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக்காட்டறேன்ன்னு சவால் விட்டான்.கடவுளும் சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்படி நடக்கும்னு அவனுக்கு சக்தியைக் கொடுத்தார். அன்னேலேர்ந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப் பட்டுச்சு. மழை அளவா பேஞ்சுது. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் பிடிபடலை. கடவுளைக் கூப்பிட்டு..பாத்தீங்களா ஆண்டவனே. நான் எப்பிடி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்ன்னு சொன்னான்.கடவுளும் சரி..அறுவடை செய் என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார். விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போயி இறைவனை ஏறிட்டுப் பார்த்தான்.கடவுள் அமைதியாகச் சொன்னார்...இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப் படுத்திக்கும். நான் வரட்சியைக் கொடுக்கும் போது தன் வேர்களை நன்றாக பாய விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கேற்றபடி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும்...ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும்...சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறி விட்டது.இது விவசாயிக்கு மட்டுமில்லை. நம் குடும்பத்துக்கும் பொருந்தும். பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாமல் சுகமாக வளர்த்தால் அவர்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்தவிதப் பலனும் இருக்காது...ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்..
B.V.SUBRAMANI
Vastu Consultant

98844 37677

No comments:

Post a Comment