Friday, January 13, 2017

முழுமையான அன்பு எனக்கு மட்டுமே சொந்தம். என் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டும்" என்று காதலியும் மனைவியும் ஆண்களிடம் வசனம் பேசும் போது சினிமாவில் வேண்டுமானால் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும். ஆனால் நிஜத்தில்...?
அவர்கள் புதிதாக மணமான தம்பதிகள். மாப்பிள்ளைக்கு தந்தை இல்லை. அண்ணன் மட்டுமே. சிறு வயதிலேயே தந்தையை இழந்த தம்பிக்கு அண்ணன் தான் எல்லாமே. அண்ணனுக்கும் மணமாகி விட்டது. ஆனாலும் தம்பி மேல் உள்ள பாசம் குறையவில்லை. அண்ணியும் நல்ல பெண்ணாக இருந்ததால் அண்ணன் தம்பிக்கு இடையில் பிளவு ஏற்படுத்தாமல் வாழ்க்கை நடத்தினாள். புதிதாக வந்த தம்பி மனைவி வந்த இரண்டு நாட்களிலேயே தனக்கு மட்டுமே உரித்தான கணவனின் அன்பு அண்ணனுக்கும் பிரிந்து போவதை சகிக்க முடியவில்லை. இதனால் கணவன் மனைவிக்கிடையில் தினசரி சண்டை சச்சரவு. கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு செல்லும் மனைவி... என்று குடும்ப வாழ்க்கையே நரகமாக மாறிக்கொண்டு வந்தது.
அண்ணன்காரன் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்தவன், தனியே பிரிந்து சென்று வேறு ஒரு வீட்டில் வாழ ஆரம்பித்தான். தன்னால் கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு வர வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் தம்பியிடம் பேச்சை குறைத்துக் கொண்டான். தன் தம்பியிடம் அன்பு காட்டக் கூட முடியவில்லையே என்ற வருத்தம் வெகு நாட்களுக்கு அண்ணன் மனதை அறுத்துக் கொண்டே இருந்தது. முடிவில் அண்ணனுக்கு சக்கரையும், ரத்த அழுத்தமும் வந்தது தான் மிச்சம்.
அன்பை காட்டக்கூடாது என்று தடை வருவதே மிகப்பெரிய தண்டனை தான். அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் புரியும். கணவனுக்கு மனைவி தடா போடுவது மட்டுமல்ல... மனைவிக்கு கணவனும் தடா போடுவது நடக்கத் தான் செய்கிறது.
சில கணவன்மார்கள் மனைவி வழி சொந்தத்திடம் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று தடை விதிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் இப்படி நடந்து கொள்ள காரணம்... பணம் தான்.
அன்பைக் காட்டி அண்ணன்காரன் தம்பியிடம் பணத்தை பிடுங்கி கொள்வானோ என்று புதிதாக வந்த மருமகளுக்கு தோன்றும். அண்ணன் தம்பி அன்பு மாசு மருவற்றது என்பது, பாவம் புதிதாக வந்த மருமகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கண்ணோட்டம் அப்படி. தன் மனைவி வீட்டார்களிடம் அதிகம் பழக்கம் வைத்துக் கொண்டால் தன் மனைவியே தனக்குத் தெரியாமல் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்து விடுவாளோ என்று கணவன் நினைப்பதும் சகஜம் தான். ஆனால் அதற்காக பிறந்த வீட்டு உறவுகளிடம் பேசக் கூடாது என்று தடை போடுவதும் எந்த விதத்திலும் நியாயம் அல்ல.
உலகத்தில் தன் மேல் அன்பு காட்டுவதற்கு ஆட்கள் இல்லை. அது போல், தான் அன்பு காட்டுவதற்கு சிறந்த நபர்கள் இல்லை என்ற நிலை உள்ள மனிதன் சிறிது நாட்களிலேயே பைத்தியக்காரன் ஆகி விடுவான்.
ஒரு வாலிபன் தன் வயதுக்கு சம்மான ஒரு இளம்பெண்ணிடம் அன்பு வைத்து அது தீவிரமானால் அதுவே காதலாக மாறுகிறது. அதுவே பெற்றோர்கள் தன் மகனிடமோ அல்லது மகளிடமோ தீவிரமான அன்பை காட்டும் போது அதுவே செல்லமாக மாறுகிறது. பெற்றோர்கள் மகனிடம் அன்பை காட்டி தன் மகனிடமே அடிமையாக மாறுகிறார்கள். அவன் கோபித்துக் கொள்ளக் கூடாது என்று அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். அவன் மனம் கோணக்கூடாது என்று அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இப்படி செய்யும் பெற்றோர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.
செல்லமாக வளர்க்கப்படும் குழந்தை எதிர்காலத்தில் பயந்தாங்கொள்ளிகளாக மாறுகிறது. அல்லது பிடிவாதக்காரர்களாக மாறுகிறது. வயதுகேற்ற வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களால் சட்டென்று மாற முடிவதில்லை. தன் வீட்டிலிருந்து மார்க்கெட்டுக்கு செல்வதற்கு கூட இந்த வழியில் செல்லலாமா அல்லது அந்த வழியில் செல்லலாமா என்று முடிவெடுப்பதில் கூட குழம்புகிறது. பிறகு எங்கே வாழ்க்கையில் பெரிய முடிவுகள் எடுப்பதில் குழம்பாமல் இருக்கும்?
ஆகவே நம்ம குழந்தைகளிடமும்,உறவுகளிலும், அளவாக அன்பு காட்டுங்கள் வளமான வாழ்வை கொடுங்கள்.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

No comments:

Post a Comment